Saturday, 6 February 2016

பிரண்டைச் சத்துமாவு

தேவையானவை:
நார் நீக்கிய பிரண்டைத் தண்டுகள் – அரை கிலோ, 
புளித்த மோர் – ஒரு லிட்டர், 
கோதுமை – ஒரு கிலோ, 
கறுப்பு எள், கறுப்பு உளுந்து – தலா 100 கிராம்.
செய்முறை:
பிரண்டை பச்சையாக இருக்கும்போதே ஒரு லிட்டர் புளித்த மோரில் இரண்டு நாட்கள் ஊறவிடவும்.
பின்னர் அந்தப் பிரண்டைகளை வெளியே எடுத்து நன்றாகக் காய வைத்து, அதனுடன் மேலே சொன்ன பொருட்களையும் சேர்த்து மிதமாக வறுத்தெடுக்கவும்.
இப்போது இந்தக் கலவையை எடுத்து மாவாக அரைத்துக் கொண்டால், கஞ்சி அல்லது களி செய்து சாப்பிடலாம்.
மருத்துவப் பயன்:
உடல் வலி, மூல நோய், ஆசனவாயில் ஏற்படும் எரிச்சல், நமைச்சல் போன்ற தொல்லைகள் நீங்கும்

‘வாய் துர்நாற்றமா..?

தினமும் காலையில் பல் துலக்குவதற்கு முன் நல்லெண்ணெய்யால் வாயை நன்றாகக் கொப்பளியுங்கள், உங்கள் வாயிலிருந்து வரும் துர்நாற்றம் சுத்தமாக இல்லாமல் போகும். பத்து நாட்களில் படிப்படியாக வாய் துர்நாற்றம் இல்லாமல் போவதை நீங்கள் உணர்வீர்கள்.
பதினைந்து நாட்கள் கடந்த பிறகு, நூறு சதவீதம் துர்நாற்றம் மறைந்து விடும். நல்லெண்ணெய்க்கு அப்படியொரு மகத்தான மருத்துவக் குணமுண்டு.
‘பாக்டீரியாக்கள்தான் வாயில் துர்நாற்றம் உண்டாகக் காரணம். பாக்டீரியாக்களை அழிக்கக் கூடிய சக்தி, நல்லெண்ணெய்க்கு இருக்கிறது. நல்லெண்ணெய் இருக்கும் இடத்தில், பாக்டீரியாவால் உயிர் வாழமுடியாது.
நல்லெண்ணெய்யில் வாய் கொப்பளித்தால், வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் முழுமையாக அழிந்து, துர்நாற்றம் இல்லாமலே போய்விடும்’.

முடி கொட்டுவது நிற்க சில குறிப்புகள்

 முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியைத் தடவினால் முடி வளரும்
* கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும்.
* நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.
* சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.
* செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.
* முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டுக் குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.
* வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துப் பார்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதைத் தடுக்கும். கருகருவென முடி வளரத் தொடங்கும்.

சுரைக்காய்

சுரைக்காயின் மருத்துவக் குணங்கள்
மனிதனின் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களையும் கொடுப்பதில் காய்கறிகளின் பங்கு அளப்பறியது. காய்கள் அனைத்துமே எளிதில் செரிக்கும் தன்மை கொண்டவை.
நம் கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் தோட்டப்பயிராக காய்கறிகளைப் பயிர்செய்து பயன்படுத்தி வந்தனர். அவற்றில் ஒன்றான சுரைக்காய் பற்றி தெரிந்துகொள்வோம்.
சுரைக்காயை பல இடங்களில் வீடுகளின் கூரைமேல் படர விட்டிருப்பார்கள். அது வெள்ளை நிறப் பூக்களையும், பெரிய குடுவை போன்ற காயையும் கொண்டிருக்கும்.
சுரையின் இலை, கொடி, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.
உடல் சூடு நீங்க
இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் உடல் சூடு இயல்பாகவே அதிகமாகக் காணப்படும். இதனால் உடலானது பலவகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடும். இதனால்தான் நம் முன்னோர்கள் உடல் சூட்டைத் தணிக்க சுரைக்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்துள்ளனர். சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு குறையும், வெப்ப நோய்கள் ஏதும் அணுகாது.
சிறுநீர் பெருக
மனித உடலில் உள்ள தேவையற்ற நீர்கள் வியர்வை, சிறுநீர் வழியாக வெளியேறும். சிறுநீரகமானது இரத்தத்தில் உள்ள இரசாயனத் தாதுக்களைப் பிரித்து வெளியேற்றுகிறது. சில சமயங்களில் இவை வெளியேறாமல் மீண்டும் இரத்தத்தால் உறிஞ்சப்பட்டு உடல் பலவகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடுகிறது. இந்த நிலையைப் போக்கி சிறுநீர் நன்கு வெளியேற சுரைக்காய் சிறந்த மருந்து.
பித்தத்தைக் குறைக்க
உணவு மாறுபாட்டாலும், மன அழுத்தத்தாலும் உடலினை இயக்குகின்ற வாத, பித்த, கபத்தில் பித்தத்தின் நிலை அதிகரிக்கும்போது உடல் பலவீனமடைந்து பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். இந்த பித்தத்தைக் குறைக்க சுரைக்காய் சிறந்தது.
சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் சமநிலைப்படும்.
· சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.
· உடலை வலுப்படுத்தும்.
· பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும்.
· இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.
· குடல் புண்ணை ஆற்றும்.
· மலச்சிக்கலைப் போக்கும்
· மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்து.
சுரைக்காயின் சதையை சிதைத்து உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடல் எரிச்சல் குறையும்.
சுரைக்காயைச் சுட்டு சாம்பலாக்கி தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் கண்நோய் நீங்கும்.
சுரையின் இலைகளை நீரிலிட்டு ஊறவைத்து அந்த நீரைப் பருகி வந்தால் வீக்கம், பெருவயிறு, நீர்க்கட்டு நீங்கும். காமாலை நோய்க்கும் கொடுக்கலாம்.
ஒரு துண்டு சுரைக்காய், விதை நீக்கிய ஒரு நெல்லிக்காய் இவற்றை நீர்விட்டு அரைத்து சாறு பிழிந்து வாரம் இருமுறை காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் இரத்த அழுத்தம் கட்டுப்படும்

முருங்கை

• முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல் நீங்கும்.
• முருங்கை காய் உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதை உண்டால் சிறுநீரகம் பலப்படும் தாதுவும்(sperm)பெருகும். எனவேதான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற பெயரும் இருக்கிறது.
• முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன.
• இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். முடி நீண்டு வளரும். நரை முடி குறையும்.தோல் வியாதிகள் நீங்கும். கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக்கீரை கை கண்ட மருந்து.
• முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கைக் காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.
• கர்ப்பப்பையின் குறைகளை போக்கி கருத்தரிப்பதை ஊக்குவிக்கும். பிரசவத்தை துரிதப்படுத்தும். முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும்.
• ஆஸ்துமா, மார்பு சளி, போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை கீரை சூப் நல்லது. ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கு நல்ல உணவு.

வீட்டிலேயே முடி வளர்ச்சித் தைலம் செய்வது எப்படி?

1. தேங்காய் எண்ணெய் - 1.5 லிட்டர். (செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெய் என்றால் சிறப்பு. கடையில் வாங்கும் புட்டி எண்ணெய்களில், தேங்காய்க்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத ரசாயன எண்ணெய் இருக்கின்றனவாம்!)
2. வெள்ளைக் கரிசாலைச் சாறு - 0.5 லிட்டர்
3. கீழாநெல்லிச் சாறு - 0.5 லிட்டர்
4. அவுரி சாறு - 0.5 லிட்டர்
5. கறிவேப்பிலைச் சாறு - 0.5 லிட்டர்
6. பொடுதலைச் சாறு - 0.5 லிட்டர்
7. நெல்லிக்காய்ச் சாறு - 0.25 லிட்டர்
8. சோற்றுக் கற்றாழைச் சாறு - 0.25 லிட்டர்
(மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் பொருட்கள் கிராமப்புறங்களில் பரவலாகக் கிடைக்கும். அப்படிக் கிடைக்காத இடங்களில், நாட்டு மருந்துக் கடைகளில் வாங்கிக்கொள்ளலாம்.)
இலைச் சாறுகளைத் தண்ணீர் அதிகம் சேர்க்காமல் இடித்தோ, மிக்ஸியில் அடித்தோ பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளவும். நெல்லிக்காய் களில் கொட்டைகளை நீக்கிவிட வேண்டும். சோற்றுக் கற்றாழையில் அதன் உள்ளிருக்கும் ஜெல்லி போன்ற பகுதியை எடுத்து நன்கு கழுவிவிட்டு, பின்னர் அதில் இருந்து மட்டும் சாறு எடுக்கவும்.
இந்தச் சாறுகளின் கலவையைத் தேங்காய் எண்ணெயுடன் கலந்து மெல்லிய தீயில் எரித்து, நீர் வற்றி தைலம் பிரியும் தருவாயில் (அந்தச் சமயம் அடியில் தங்கியிருக்கும் கசடு மெழுகு போல இருக்கும்) பாத்திரத்தை இறக்கி வடித்துக்கொள்ளவும்.
இது மருந்து கிடையாது. அதனால் முடி வளர்ச்சியை ஊக்குவிக்க இந்தத் தைலம் குறைந்தபட்சம் 4-5 மணி நேரம் தலையில் ஊற வேண்டும். (10, 15 சொட்டுகள் தேய்த்தால் போதும்.) அதன் பிறகே தலைக்குக் குளிக்க வேண்டும். பலர் நினைப்பது போல செயற்கை கண்டிஷனர்கள் அசகாயப் பொருள் அல்ல. செயற்கை எண்ணெய் ப்ளஸ் ரசாயனங்களின் கலவைதான். எண்ணெய் தேய்க்காத தலைமுடி கண்டிப்பாக உதிரும் என்பது நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!

உடல் பருமனைக் குறைக்க சில வழிகள்

* இஞ்சியைத் தோல் சீவி அரைத்து, ஒரு கரண்டி சாறு எடுத்து, அதனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் கலந்து, கால...ையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் (Gingerol), ஜின்ஜிபெரின் (Zingiberine) மற்றும் தேன் ஆகியவை செரிமானத்தைத் தூண்டுவதுடன் தேவையற்ற கொழுப்பையும் எரிக்கும்.
* கீழாநெல்லி, வெந்தயம், மஞ்சள், கறிவேப்பிலை, நெல்லிக்காய் சம அளவு எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் நீரில் கலந்து உண்ண, உடலின் கொழுப்பு குறைந்து, எடையும் சீராகும்.
* சிறுகுறிஞ்சான், நெருஞ்சில், மூக்கிரட்டை, சீரகம், திப்பிலி, மிளகு, ஓரெடை எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தேனில் உண்ண உடல் எடை குறையும்.
* பெருஞ்சீரகத்தைப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அருந்த, உடல் எடை குறையும்.
* எலுமிச்சைச் சாறு ஒரு கரண்டி சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் நீரில் கலந்து பருக வேண்டும். இதில் உள்ள வைட்டமின் சி ரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன் கொழுப்பைக் குறைத்து உடலின் எடையையும் குறைக்கிறது.
* நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஒட்டுதல், யோகா, தியானம், முதலியவற்றை மேற்கொண்டால் உடல்பருமன் நிச்சயம் குறையும்.
* சேர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்:தக்காளி, கோஸ், பப்பாளி, வெள்ளரி, தர்பூசணி, புரூகோலி, ஆப்பிள், ஓட்ஸ், வால்நட், பாதாம், பருப்பு வகைகள், மோர்.
* நீக்க வேண்டிய உணவுப் பொருட்கள்:இனிப்புகள், வெள்ளை ரொட்டி, பட்டை தீட்டப்பட்ட தானியங்கள், துரித வகை உணவுகள், எண்ணெய் மற்றும் கொழுப்பு மிகுந்த உணவு வகைகள். தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்